வைர வியாபாரி மெஹுல் சோக்சி நாடு கடத்தும் பணி துவங்கியது
வைர வியாபாரி மெஹுல் சோக்சி நாடு கடத்தும் பணி துவங்கியது
ADDED : டிச 18, 2025 06:37 AM

பிரஸல்ஸ்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டு தப்பி பெல்ஜியமில் தஞ்சமடைந்துள்ள வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான பணிகள் நேற்று துவங்கின.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, தன் சகோதரர் மகன் நிரவ் மோடியுடன் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கினார்.
கடந்த 2018-ல் இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. மெஹுல் சோக்சி கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பி ஓடினார். அங்கு குடியுரிமை பெற்றிருந்த அவர், புற்றுநோய் சிகிச்சைக்காக இந்த ஆண்டு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்துக்கு சென்றார்.
இந்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று பெல்ஜியம் போலீசார் அவரை ஏப்ரலில் கைது செய்தனர். அவரை நாடு கடத்த அக்டோபரில் பெல்ஜியம் உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதை எதிர்த்து மெஹுல் சோக்சி பெல்ஜியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டை கடந்த 9ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை நாடு கடத்தும் பணிகள் நேற்று துவங்கின.

