ஈரானுக்கு அணு ஆயுத ரகசியங்களை வழங்கியதா ரஷ்யா; அமெரிக்கா, பிரிட்டன் கவலை!
ஈரானுக்கு அணு ஆயுத ரகசியங்களை வழங்கியதா ரஷ்யா; அமெரிக்கா, பிரிட்டன் கவலை!
ADDED : செப் 15, 2024 01:26 PM

வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போருக்கு ஆயுதங்களை வழங்கிய ஈரானுக்கு நன்றிக்கடனாக ரஷ்யா அணு ஆயுத ரகசியங்களை வழங்கி இருக்கலாம் என அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அச்சம் தெரிவித்து உள்ளன.
கவலை
சர்வதேச தடைகள் காரணமாக கடந்த 2015ம் ஆண்டு அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதை நிறுத்த அமெரிக்கா உடன் ஈரான் ஒப்பந்தம் போட்டது. ஆனால், 2018ம் ஆணடு டிரம்ப் ஆட்சி காலத்தில் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு அணு ஆயுதங்களை தயாரிப்பதில் ஈரான் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கு தேவையான யுரேனியத்தை சேமித்து வைத்து உள்ளது. இதன் மூலம் அணு ஆயுதங்களை ஈரான் தயாரிக்க முடியும் என மேற்கத்திய நாடுகள் கவலை கொண்டுள்ளன.
நன்றிக்கடன்
இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி ஈரான் உதவி செய்துள்ளது. இதற்காக அந்நாடு மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக மேற்கத்திய நாடுகள் எச்சரித்து உள்ளன. ஆனால், இது குறித்து ரஷ்யா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஈரானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அணு குண்டு தயாரிக்க தேவையான அணு ஆயுத ரகசியங்களை ரஷ்யா பகிர்ந்து இருக்கலாம் என மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
விவாதம்
இது தொடர்பாக அமெரிக்கா அதிபர் அதிபர் பைடன் மற்றும் பிரிட்டன பிரதமர் ஸ்டார்மர் சந்தித்த போது, அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என நீண்ட கால லட்சியத்துடன் யுரேனியத்தை சேமித்து வைத்து வரும் ஈரானுடன், ரஷ்யா உறவை பலப்படுத்தி வருவதற்கு கவலை தெரிவித்தனர். அணு ஆயுத ரகசியங்களை ரஷ்யா பகிர்ந்தது குறித்தும் விவாதித்தனர்.
குற்றச்சாட்டு
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் கூறும் போது, '' ஈரான் கேட்டு வரும் அணு ஆயுத ரகசியங்களை ரஷ்யா வழங்கி வருகிறது '' என குற்றம்சாட்டினார்.உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ஈரான் மட்டுமின்றி, வட கொரியாவும் ரஷ்யாவிற்கு ஆயதங்களை வழங்கி உள்ளது.
சீனா ஆயுதங்களை வழங்காவிட்டாலும், அதனை தயாரிக்க தேவையான தொழல்நுட்ப ரீதியான உதவிகள், கருவிகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.