ADDED : ஜூலை 08, 2025 07:06 AM

மாஸ்கோ; ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ரோமன் ஸ்டாரோவோயிட், 53, பதவி நீக்கப்பட்ட சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக, கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட ரோமன் ஸ்டாராவோயிட், திடீரென நேற்று அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்தியில், அதற்கான காரணம் கூறப்படவில்லை.
போக்குவரத்துத் துறை தற்காலிக அமைச்சராக, நோல்கோராட் பிராந்தியத்தின் முன்னாள் கவர்னர் ஆன்ட்ரே நிகிதன் நியமிக்கப்பட்டார்.
உக்ரைனை ஒட்டியுள்ள குர்ஸ்க் மாகாணத்தின் கவர்னராக ஐந்து ஆண்டுகள் இருந்த ஸ்டாராவோயிட், மாஸ்கோவின் புறநகர் பகுதியில் தன் காரில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் தற்கொலை செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்துத் துறையில் அவர் சிறப்பாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, கடந்த சில வாரங்களாகவே பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், குர்ஸ்க் மாகாண கவர்னராக இருந்தபோது பல ஊழல்களில் அவர் ஈடுபட்டதாலேயே, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

