கங்கை நதியில் கழிவு நீர் கலப்பதா; தேசிய பசுமை தீர்ப்பாயம் காட்டம்
கங்கை நதியில் கழிவு நீர் கலப்பதா; தேசிய பசுமை தீர்ப்பாயம் காட்டம்
ADDED : நவ 11, 2024 09:25 AM

புதுடில்லி: கங்கை நதி மாசுபாடு விவகாரத்தில் உத்தரகண்ட் அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
புனித நதியாக கருதப்படும் கங்கை, உத்தரகண்ட், உ.பி., பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது. வழித்தடத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள், மனித, விலங்குகளின் கழிவுகளால் நதி மாசடைந்துள்ளது. அண்மையில் கங்கை நதி குளிக்கத் தகுதியில்லாதது என்றும், மனித கழிவுகளில் காணப்படும் கோலி பார்ம் பாக்டீரியாக்கள் இந்த நீரில் அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், கங்கை நதியை பாதுகாக்கும் விதமாக, மக்கள் குளிக்க தடை விதிப்பது, தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை தடுப்பது உள்ளிட்ட செயல்களில் மாநில அரசுகள் ஈடுபடவில்லை என்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், கங்கை நதியின் பிறப்பிடமே மாசுபட்டிருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தா பிறப்பித்த உத்தரவு: கங்கோத்ரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கங்கை நதியின் தண்ணீரை ஆய்வு செய்ததில் அதில், கோலி பார்ம் பாக்டீரியாக்கள் அதிகம் இருந்துள்ளன. கங்கை நதி பாதுகாப்பு விவகாரத்தில் உத்தரகண்ட் மெத்தனமாக செயல்படுகிறது. அம்மாநிலத்தின் சமீபத்திய அறிக்கையில் சந்தேகம் உள்ளது. எனவே, தலைமை செயலர் இந்த விவகாரத்தில் கவனம் எடுத்து, உரிய அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும்.
டேராடூன், உத்தரகாஷி, பவுரி, சமோலி ஆகிய பகுதிகளில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்படுவதில்லை. அதேவேளையில், ஹரித்வார், தெஹ்ரி பகுதிகளில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் திறனுக்கு அதிகமான தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. உத்தரகாண்டில் வடிகால்களின் மூலம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக கங்கையில் கலக்கப்படுகிறது, எனவே, கங்கை நதியை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.