அமெரிக்காவுக்கு அதிக வரி விதிப்பு; முந்தைய ஆட்சியாளர்களை காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவுக்கு அதிக வரி விதிப்பு; முந்தைய ஆட்சியாளர்களை காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
ADDED : பிப் 25, 2025 07:28 AM

வாஷிங்டன்: 'உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்துள்ளனர். இதற்கு முந்தைய அமெரிக்கத் தலைமை தான் காரணம்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரி 25 சதவீதம் அடுத்த மாதம் முதல் தொடங்கும். மார்ச் 4ம் தேதிக்குள் அறிவிக்கப்படும். மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ள பரஸ்பர வரிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மெக்சிகோ, கனடா மட்டுமல்ல, பல நாடுகள் எங்களை பயன்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கு நாங்கள் சரியான நேரத்தில் வரி விதிப்போம். உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்து, துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இது நடக்க காரணமாக இருந்த அந்நாடுகளை குறை கூறவில்லை. முந்தைய அமெரிக்கத் தலைமையைத்தான் குறை கூறுகிறேன்.
நாங்கள் பரஸ்பர வரியை விதிக்க விரும்புகிறோம். எங்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலாக நாங்களும் அதிக வரியை விதிப்போம். இது நாட்டிற்கு மிகவும் நல்லது. நமது நாடு மீண்டும் பணக்காரராக மாறும். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.