எங்கள் விவகாரங்களில் தலையிடாதீர்கள்: ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது சீனா
எங்கள் விவகாரங்களில் தலையிடாதீர்கள்: ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது சீனா
ADDED : ஏப் 15, 2026 06:53 AM

டெஹ்ரான்: அமெரிக்கா அறிவித்துள்ள ஈரான் மீதான கடற்படை முற்றுகைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தங்கள் கப்பல் போக்குவரத்தில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்துள்ள போரை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தது.
கடும் எதிர்ப்பு
இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், கப்பல்கள் செல்வதற்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீன ராணுவ அமைச்சர் அட்மிரல் டாங் ஜூன் கூறியுள்ளதாவது: உலக அமைதியை பேணுவதில் சீனா உறுதியாக உள்ளது. மேற்காசியாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சீன கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து இயங்கும்.
தலையீடு கூடாது
ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. நாங்கள் அவற்றை மதித்து நடப்போம்; மற்றவர்கள் எங்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த தடையை மீறி சீனாவுடன் தொடர்புடைய 'ரிச் ஸ்டார்ரி' என்ற கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றுள்ளது.
