தொழுகையின் போது பாட்டு போடாதீங்க: துர்கா பூஜைக்கு வங்கதேசத்தில் கட்டுப்பாடு
தொழுகையின் போது பாட்டு போடாதீங்க: துர்கா பூஜைக்கு வங்கதேசத்தில் கட்டுப்பாடு
ADDED : செப் 14, 2024 05:40 AM

டாக்கா: வங்கதேசத்தில் தினசரி தொழுகையின் போது துர்கா பூஜை பந்தல்களில் இசைக்கருவி இசைப்பது, பாடல்கள் ஒலிக்கவிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, அந்நாட்டின் இடைக்கால அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டத்தின் போது, இங்கு வசிக்கும் ஹிந்து உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வங்கதேசத்தில் துர்கா பூஜை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா பூஜை பந்தல் அமைத்து, அங்கு பிரமாண்ட துர்க்கை சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவர்.
அறிவுறுத்தல்
கடந்த ஆண்டு 33,431 பந்தல்கள் நாடு முழுதும் அமைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக, துர்கா பூஜை காலங்களில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு அக்., 9 - 13 வரையில் துர்கா பூஜை பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான பந்தல்கள் அமைக்கப்பட உள்ளதாக ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், துர்கா பூஜையின் போது ஹிந்துக்கள் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மசூதிகளில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் இருந்து, தொழுகை முடிவடையும் வரை, துர்கா பூஜை பந்தல்களில் வாத்தியங்கள் இசைப்பது, பாடல்கள் ஒலிக்கவிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, ஹிந்து அமைப்புகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த கோரிக்கையை ஹிந்து அமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளதாக உள்துறை ஆலோசகர் முகமது ஜஹாங்கிர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை பாயும்
மேலும், துர்கா பூஜை பந்தல்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை 24 மணி நேரமும் அரசு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ''நாம் மத நல்லிணக்கத்தை பேணும் தேசம். துர்கா பூஜையின் போது மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்களை யாரும் செய்யக்கூடாது. அமைதியை குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்,'' என, வங்கதேச ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.