கனடா பிரதமரை சந்திக்க விருப்பமே இல்லை: கோபம் குறையாமல் பேசிய டிரம்ப்
கனடா பிரதமரை சந்திக்க விருப்பமே இல்லை: கோபம் குறையாமல் பேசிய டிரம்ப்
ADDED : அக் 27, 2025 04:11 PM

டோக்கியோ; கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க விருப்பம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், தமது ஆசிய பயணத்தின் 2வது கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ புறப்பட்டார். இதுகுறித்து தமது ட்ரூத் சோஷியல் வலைதள பதிவில் கூறியதாவது;
சிறந்த, துடிப்பான நாடான மலேசியாவை விட்டு நகர்கிறேன். முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளேன். தாய்லாந்து, கம்போடியா இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
போர் வேண்டாம், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அடுத்த பயணம் இப்போது ஜப்பானை நோக்கி என்று பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பயணத்தின் போது தமது விமானத்தில் இருந்தபடி நிருபர்களிடம் பேசினார். அவரிடம், இந்த வார இறுதியில் ஆசிய, பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு டிரம்ப் அளித்த பதில்: நான் அவரை(மார்க் கார்னி) சந்திக்க விரும்பவில்லை. இன்னும் சிறிது காலம் நான் அவரை சந்திக்க போவது இல்லை. கனடாவுடன் தற்போது செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அதை செயல்படுத்த உள்ளோம்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
பின்னர், டோக்கியோ வந்திறங்கிய டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் பதிவில், ஜப்பானின் புதிய பிரதமர் சனா டகாய்ச்சியை சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்வமாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

