ADDED : ஏப் 30, 2026 06:54 AM

பீஜிங்: சீன தலைநகரான பீஜிங்கில், நாளை முதல், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானத்தை பறக்கவிடவும், விற்பனை செய்யவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் வழக்கமாகவே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம். ஏற்கனவே, உளவு பார்க்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அரசு அலுவலகங்கள் மற்றும் விமான நிலையப் பகுதிகளில், 'டெஸ்லா' கார்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தலைநகர் பீஜிங்கில், இப்போது ட்ரோன்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருதி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாத இறுதியில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும், சில குறிப்பிட்ட துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டுமெனில், முன்கூட்டியே போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
