"பசி வந்தால் பறக்க வேண்டாம்... யானைகளை கொன்று நாங்களே தருகிறோம்" - சாப்பிடுங்கள் என அரசே சொல்கிறது
"பசி வந்தால் பறக்க வேண்டாம்... யானைகளை கொன்று நாங்களே தருகிறோம்" - சாப்பிடுங்கள் என அரசே சொல்கிறது
ADDED : செப் 02, 2024 12:28 PM

நமீபியா: கடும் வறட்சி காரணமாக மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், யானை, வரிக்குதிரை, நீர்யானை, எருமை என 100 க்கும் மேற்பட்ட விலங்குகளை கொன்று மக்களுக்கு உணவாக இறைச்சியை வழங்கிட தென்ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியா முடிவு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக வரும் நாட்களில் மனிதர்கள், வனவிலங்குகளை வேட்டையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் மோதலால் மனித உயிர்ப்பலி ஏற்படும் என வனத்துறை அச்சத்தில் இருந்தது. இந்நிலையில், யானைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளை இறைச்சிக்காக கொல்ல நமீபியா அரசு முடிவு செய்துள்ளது.
பிரபல ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையின்படி, நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் 83 யானைகள், 300 வரிக்குதிரைகள் மற்றும் 30 நீர்யானைகள் உட்பட மொத்தம் 723 வன விலங்குகளை அழிக்க முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் நமீபியா அதன் மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி பேருக்கு அதிக உணவுப் பாதுகாப்பின்மை ஏற்படும் என்று அஞ்சுவதால், வறட்சியின் காரணமாக தங்களுக்கு உணவளிக்க போராடும் மக்களிடையே அவற்றின் இறைச்சி விநியோகிக்கப்படும்.
ஐ. நா., சபையின் ஒரு ஆய்வுஅறிக்கையின்படி கடந்த பல ஆண்டுகளில் மிக மோசமான வறட்சியின் காரணமாக நமீபியா ஏற்கனவே இருப்பில் இருந்த உணவு இருப்பு 84% தீர்ந்து விட்டது.
சுமார் 2 லட்சம் யானைகள்
கடந்த வாரம் விலங்குகளின் எண்ணிக்கை, மேய்ச்சல் நிலம் மற்றும் நீர் ஆதாரத்தை விட அதிகமாக இருப்பதாகக் நமீபிய அரசு தெரிவித்து இருந்தது. இது கடும் வறட்சி நிலவும் நிலையில், அரசு தலையிடாவிட்டால், மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய ஐந்து
நாடுகளில் பரவியுள்ள பாதுகாப்புப் பகுதியில் தென்னாப்பிரிக்கப் பகுதியில்
சுமார் 2 லட்சம் யானைகள் வாழ்கின்றன.
இதன் விளைவாக, அடையாளம் காணப்பட்ட மோதல் பகுதிகளில் இருந்து 83 யானைகள் அழிக்கப்படும், (மற்றும்) வறட்சி நிவாரண திட்டத்திற்கு இறைச்சி ஒதுக்கப்படும்,' என்று நமீபிய அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
30 நீர்யானைகள், 60 எருமைகள், 50 கவரிமான்கள் , 100 காட்டெருமைகள், 300 வரிக்குதிரைகள் மற்றும் 100 காட்டுஆடுகள் ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன.
கைதேர்ந்த வேட்டைக்காரர்கள் மற்றும் அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் இதுவரை 157 விலங்குகளை வெட்டி, 56,800 கிலோவுக்கும் அதிகமான இறைச்சியை சேகரித்து வைத்துள்ளது அரசு.