பெண் அதிபரை கட்டியணைத்து முத்தமிட முயன்ற போதை நபர்
பெண் அதிபரை கட்டியணைத்து முத்தமிட முயன்ற போதை நபர்
ADDED : நவ 06, 2025 12:29 AM

மெக்சிகோ:மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் அதிபர் கிளாடியா ஷீயின்பாம் பொதுமக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் கட்டியணைத்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின், முதல் பெண் அதிபராக பதவியேற்ற கிளாடியா ஷீயின்பாம், மக்களுடன் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது சாலையில் இறங்கி உரையாடுவது வழக்கம். அப்போது பொதுமக்கள் அவருடன், 'செல்ப ி ' எடுத்துக்கொள்வதுடன், கைகுலுக்கி உரையாடி மகிழ்வர்.
அந்த வகையில், மெக்சிகோ நகரின் மையப்பகுதியில் காரில் இருந்து இறங்கி, பொதுமக்களுடன் நேற்று அவர் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, மது போதையில் இருந்த ஒருவர், பின்னால் இருந்து அதிபரை கட்டியணைத்து முத்தமிட முயன்றார். ஆனால், அதற்கு கோபப்படாத அதிபர் கிளாடியா, அந்த நபரின் கைகளை மென்மையாக தட்டிவிட்டு சிரித்தபடி ' கவலைப்படாதீர்கள்' என்று கூறும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து அதிபரின் அலுவலகம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
அண்மையில் மிச்சோகான் மாகாணத்தில் மேயர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அதிபரிடம் பொதுவெளியில் ஒருவர் அத்துமீறி இருப்பது நாட்டில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

