துபாயில் வசிப்போரின் மொபைல் போன்களுக்கு பறந்த எச்சரிக்கை
துபாயில் வசிப்போரின் மொபைல் போன்களுக்கு பறந்த எச்சரிக்கை
ADDED : மார் 06, 2026 05:07 PM

துபாய்: துபாயில் வசிப்பவர்களிள் மொபைல் போன்களுக்கு ஏவுகணை தாக்குதல்கள் பற்றிய எச்சரிக்கைகள் முன்கூட்டியே அனுப்பப்படுகின்றன. வெளியிடங்களில் எக்காரணம் கொண்டும் நடமாட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
ஈரானுக்கு எதிரான, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினரின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளங்களை ஈரான் தாக்குகிறது.
இந்த சூழலில், துபாயில் வசிப்பவர்களின் மொபைல் போன்களுக்கு அந்த நாட்டு அரசு சார்பில் தற்போது எச்சரிக்கை குறுஞ்செய்திகள் (SMS) அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த செய்தியில் எங்கு எங்கு எல்லாம் ஏவுகணை தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று எச்சரிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
மேலும், ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் கூறுகையில், எங்களுக்கு மொபைல்போனில் தொடர்ச்சியாக 4 எச்சரிக்கைகள் வந்தன. அவசர நிலையின் போது தேவைப்படும் என்பதற்காக அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்துள்ளோம்.
பாஸ்போர்ட் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களையும் பாதுகாப்பாக ஒரு பையில் வைத்து தயாராக இருக்கிறோம் என்றார்.
இதற்கிடையே துபாயில் உள்ள பூங்காக்கள், ரிசார்ட்டுகள் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

