ஒருபுறம் நிலநடுக்கம்... மறுபுறம் எரிமலை: இயற்கை பேரிடரால் அலறும் ரஷ்ய மக்கள்
ஒருபுறம் நிலநடுக்கம்... மறுபுறம் எரிமலை: இயற்கை பேரிடரால் அலறும் ரஷ்ய மக்கள்
ADDED : ஆக 18, 2024 06:49 AM

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குக்கரை பகுதியில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத்தொடர்ந்து எரிமலை வெடிப்பும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
நிலநடுக்கம்
ரஷ்யாவின் கிழக்கு கடல் பகுதியான கம்சட்காவில், இந்திய நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இதனால், கட்டிடங்கள் குலுங்கியதால், அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கமானது கம்சட்காவில் இருந்து 90 கி.மீ., தொலைவில் பூமிக்கு அடியில் 50 கி.மீ., ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.
இதுவரையில் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகளோ, உயிர்ச்சேதமோ பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
எரிமலை வெடிப்பு
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பெட்ரோபாவ்லோஸ்க்-கம்சக்ஷை பகுதியில் இருந்து 450 கி.மீ., தொலைவில் உள்ள ஷிவெலுச் எரிமலை வெடித்து சிதறியது. இதனால், தீக்குழம்பு வெளியேறிய நிலையில், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த பேரிடர்களால் மக்கள் பாதிக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கம்சட்கா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஒரே நாளில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பும் அடுத்தடுத்து ஏற்பட்டதால் கம்சட்கா பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.