எண்ணற்ற அவமானங்களால் எல்லையற்ற மகிழ்ச்சி; சொல்கிறார் எலான் மஸ்க்!
எண்ணற்ற அவமானங்களால் எல்லையற்ற மகிழ்ச்சி; சொல்கிறார் எலான் மஸ்க்!
ADDED : பிப் 17, 2025 03:45 PM

வாஷிங்டன்: 'எண்ணற்ற அவமானங்களால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, அதிபர் டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்று ஒன்றை உருவாக்கி உள்ளார். இத்துறையின் தலைவராக எலான் மஸ்க் உள்ளார்.
இவரது குழுவினர் ஒவ்வொரு அரசு துறையாக உள்ளே நுழைந்து, தேவையற்ற அரசு செலவினங்களை கண்டறிந்து தடை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, தேவையற்ற அரசுத்துறை ஊழியர்களை தானாக முன்வந்து வேலையில் இருந்து விலகிக் கொள்ளவும் வற்புறுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கிய யுஎஸ்எய்ட் நிறுவனத்தையும் மூடிவிட்டனர். இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் பலரும், எலான் மஸ்க்கை அவருக்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்க்கின்றனர்.
இது மட்டுமின்றி, சமீபத்தில் எழுத்தாளர் ஆஷ்லே க்லேர், தன் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு மஸ்க் பதில் எதுவும் கூறாத நிலையில், அவரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இது எல்லாமே, எக்ஸ் சமூக வலைதளத்திலேயே தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து, எலான் மஸ்க் தனது கருத்தை தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எனக்குச் சொந்தமான தளத்தில் (டுவிட்டர்), நான் அனுபவிக்கும் எண்ணற்ற அவமானங்களால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என பதிவிட்டுள்ளார்.