டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., பதவியிலிருந்து நீக்கமா: எலான் மஸ்க் மறுப்பு
டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., பதவியிலிருந்து நீக்கமா: எலான் மஸ்க் மறுப்பு
UPDATED : மே 01, 2025 05:36 PM
ADDED : மே 01, 2025 04:52 PM

வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., பதவியில் இருந்து தன்னை மாற்ற முயற்சி நடப்பதாக வெளியான தகவலை எலான் மஸ்க் மறுத்து உள்ளார்.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவராக உள்ளார். மேலும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதனை 'எக்ஸ்' என பெயர் மாற்றம் செய்துள்ளார்.
இத்துடன் அதிபர் டிரம்ப் அரசில் சிறந்த நிர்வாகத்திற்கான குழு தலைவராக உள்ளார். இதில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்து உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க நாளிதழ் ஒன்று, டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாக குழுவினர், எலான் மஸ்க்கிற்கு பதில், புதிய சி.இ.ஓ.,வை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என செய்தி வெளியிட்டு இருந்தது.
இதற்கு மறுத்து டெஸ்லா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓ., நியமிக்க நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக மீடியாக்களில் தகவல் வெளியாகி உள்ளது. இது தவறான செய்தி. அந்த தகவல் வெளியிடப்படுவதற்கு முன்னரே, இந்த விளக்கத்தை கொடுத்துவிட்டோம். நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆக எலான் மஸ்க் தொடர்கிறார். அவர் மீது நிர்வாக குழுவினர் முழு நம்பிக்கை வைத்து உள்ளனர் என தெரிவித்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரக்க நாளிதழ் செய்தியில் துளியும் உண்மை இல்லை. ஒரு தவறான கட்டுரையை வெளியிடுவதும், டெஸ்லா இயக்குநர்கள் குழுவால் முன்கூட்டியே தரப்பட்ட ஒரு தெளிவான மறுப்பைச் சேர்க்க தவறுவதும் மிகவும் மோசமான நெறிமுறை மீறல்என தெரிவித்து உள்ளார்.