யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதுதான்... எலான் மஸ்க் செய்த மாபெரும் தவறு!
யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதுதான்... எலான் மஸ்க் செய்த மாபெரும் தவறு!
UPDATED : அக் 05, 2024 03:59 PM
ADDED : அக் 05, 2024 09:02 AM

பிரேசிலியா: பிரேசில் நாட்டு கோர்ட் உத்தரவுப்படி 5.2 மில்லியன் டாலர்கள் அபராதத் தொகையை எக்ஸ் தள நிறுவனம் செலுத்தியது; ஆனால் தவறான வங்கி கணக்கில் அபராதத்தை செலுத்தி நீதிபதியிடம் குட்டு வாங்கியுள்ளது.
எக்ஸ் சமூக வலைத்தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர். எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடற்ற வகையில் கருத்துக்கள் பரிமாறப்பட வேண்டும் என்று விரும்புபவர். இவரது கருத்து சுதந்திரக் கொள்கையால், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்துக்கு பிரச்னை ஏற்பட்டது.
கோர்ட் உத்தரவுப்படி முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் எக்ஸ் தளம் மீது குற்றம் சாட்டினார். அபராதமும் விதித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், பிரேசில் நாட்டு அலுவலகத்தை மூடிவிட்டு, ஊழியர்களை நீக்கினார். இருப்பினும், எக்ஸ் தள சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். கோர்ட் உத்தரவை எலான் மஸ்க் ஏற்க மறுத்த நிலையில் பிரேசிலில் எக்ஸ் தளத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். பிரேசில் நாட்டில் இருக்கும் 2.2 கோடி பயனர்களை இழக்க விரும்பாத எக்ஸ் நிறுவனம், வேறு வழியின்றி கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தது. அபராத தொகையும் செலுத்த ஒப்புக்கொண்டது.
அபராதத் தொகையை செலுத்திய எக்ஸ் நிறுவனம், கோர்ட் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பாமல், வேறு வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிட்டது. இதை சுட்டிக்காட்டி குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட், மீண்டும் பணத்தை சரியான கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
சிக்கல் மிகுந்த ராக்கெட் விஞ்ஞானம் எல்லாம் சர்வ சாதாரணமாக விவாதிக்க கூடிய எலான் மஸ்க், இப்படி கோர்ட் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாரே என்று இணையத்தில் பலரும் கிண்டல் செய்து கமென்ட் பதிகின்றனர்.
கோர்ட் இப்படி அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்காமல் மஸ்க் தப்பு கணக்கு போட்டு விட்டார் என்றும், யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதுதான் போலிருக்கிறது என்றும் நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.