ADDED : அக் 17, 2025 02:32 AM
மாண்டிவிடியோ: தென் அமெரிக்க நாடான உருகுவேயில், தீவிர நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் விருப்பப்படி கருணைக்கொலை செய்வதற்கான அனுமதி வழங்கவேண்டும் என, நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன்படி, தலைநகர் மாண்டிவிடியோவில் உள்ள செனட் சபையில் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
கீழ்சபை இதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. மேல்சபையில் மசோதாவை கொண்டு வந்தபோது, 31 எம்.பி.,க்களில் 20 பேர் ஆதரவாக ஓட்டளித்தனர்.
இந்த சட்டம், மருத்துவ நிபுணரால் மேற்கொள்ளப்படும் கருணைக் கொலையை அனுமதிக்கிறது. ஆனால், நோயாளி தானே மருந்து எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதை அனுமதிக்கவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையை தேர்ந்தெடுக்க விரும்பினால், இரண்டு மருத்துவர்கள் அவர்களின் மனநல தகுதியை உறுதிசெய்ய வேண்டும். பெல்ஜியம், கொலம்பியா, நெதர்லாந்து போல் அல்லாமல், உருகுவேயில், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.