தப்பியவர் எவரும் இல்லை; தாய்லாந்து பிரதமருக்கும் வந்தது மோசடி போன் அழைப்பு!
தப்பியவர் எவரும் இல்லை; தாய்லாந்து பிரதமருக்கும் வந்தது மோசடி போன் அழைப்பு!
ADDED : ஜன 17, 2025 11:04 AM

பாங்காக்: ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அரசு தலைவர் ஒருவரின் குரலில், மோசடி அழைப்பு எனக்கு வந்தது என தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு மோசடியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து செயல்படும் இணைய மோசடி கும்பல்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. வெளிநாடுகளில் இருந்தாலும், போலியான எண்களிலிருந்து அழைத்து இந்த மோசடிகளை அரங்கேற்று வருகின்றனர். தற்போது மோசடி அழைப்புகளால், உலக நாடுகளின் தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனக்கு ஒரு மோசடி அழைப்பு வந்தது என தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா தெரிவித்துள்ளார். அந்த குரல், யாருடைய குரல் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. ஆனால், அது ஒரு பிரபலமான தலைவரின் குரல் என கூறியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது: குரல் மிகவும் தெளிவாக இருந்தது. நான் அதை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டேன். அவர்கள் முதலில் ஒரு குரல் கிளிப்பை அனுப்பி, 'எப்படி இருக்கீங்க? நான் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என கூறினர்.
பின்னர் அதே எண்ணிலிருந்து வந்த அழைப்பை எடுக்கவில்லை. பின்னர் அவர்கள் நன்கொடை கேட்டு ஒரு வாய்ஸ் செய்தி வந்தது. நீங்கள் தான் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இன்னும் நன்கொடை அளிக்கவில்லை,' என்று அந்த குரல் வலியுறுத்தியது. நான் ஒரு கணம் திடுக்கிட்டேன்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேறு ஒருவரின் குரலில் பேசி மோசடி செய்ய முயற்சி நடப்பதை புரிந்து கொண்டேன். இவ்வாறு தாய்லாந்து பிரதமர் கூறி பகீர் கிளப்பி உள்ளார். அண்டை நாட்டு அரசு தலைவர் ஒருவரின் குரலில், தாய்லாந்து பிரதமரிடம் பணம் கேட்டு மோசடி செய்ய நடந்த முயற்சி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.