காசாவில் நிலைமை மோசம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
காசாவில் நிலைமை மோசம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ADDED : நவ 09, 2024 08:42 PM

ஜெனிவா: வடக்கு காசாவில் கடுமையான பஞ்சம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இருதரப்பினரிடையே தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போர் காரணமாக ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வடக்கு காசாவில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.பி.சி., எனப்படும் ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு வகைப்பாட்டு அமைப்பின் அறிக்கையை டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, வடக்கு காசாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முக்கிய உணவுப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மருந்து பொருட்களை சில தினங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில், காசாவிற்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக ஐ.நா.,வின் உலக உணவு திட்டக்குழுவினரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.