ADDED : மார் 22, 2025 05:19 AM

லண்டன் : பிரிட்டனின் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் அருகே துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, நேற்று நாள் முழுதும் விமான நிலையம் மூடப்பட்டது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சர்வதேச அளவில் அதிக விமானங்கள் வந்து செல்லும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று.
கடந்த ஜனவரியில் ஒரே நாளில், 63 லட்சம் பயணியர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தியது சாதனையாக கருதப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 2 லட்சம் பயணியர் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹீத்ரூ விமான நிலையத்திற்கான மின் வினியோகம், அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து வழங்கப்படுகிறது.
இந்த துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மிகப் பெரிய நெருப்பு பந்து எழுந்து அப்பகுதி முழுதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதில், விமான நிலையத்திற்கான, 'ஜெனரேட்டர்' கருவியும் தீயில் கருகியது. இதனால் விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த 70 வீரர்கள், 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக, ஹீத்ரூ விமான நிலையம் நேற்று நாள் முழுதும் மூடப்பட்டது.
தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
புறப்பட வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வருகை மற்றும் புறப்பாடுக்கு காத்திருந்த 1,350 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. நிலைமை சீரடைந்து விமான நிலையம் திறக்கப்பட்டாலும், பயணியர் போக்குவரத்து சீரடைய இன்னும் சில நாட்களாகும் என கூறப்படுகிறது.
இந்த விபத்தினால், அப்பகுதியில் இருந்த 13,000க்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்களும் இருளில் மூழ்கின.