மாலியில் ஐந்து இந்தியர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்
மாலியில் ஐந்து இந்தியர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்
ADDED : நவ 09, 2025 12:53 AM
பமாகோ: மாலி நாட்டில் வேலை பார்த்து வந்த ஐந்து இந்தியர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அல் - குவைதா, ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்கள், அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று, மேற்கு மாலியில் உள்ள கோப்ரி அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று நுழைந்தது. அவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்கிருந்த ஐந்து இந்தியர்களை கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட இந்தியர்கள், மாலி மின்மயமாக்கல் திட்டத்திற்காக வேலைக்குச் சென்றவர்கள். இதையடுத்து, அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் மற்ற இந்தியர்கள், தலைநகர் பமாகோவுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடத்தலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அல் - -குவைதாவுடன் தொடர்புடைய ஜே.என்.ஐ.எம்., என்ற முஸ்லிம் ஆதரவு குழு இந்த கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மாலியில் வெளிநாட்டினர் கடத்தப்படுவது அடிக்கடி நடக்கிறது. கடந்த 2012ல் இருந்து அங்கு நிகழ்ந்து வரும் மோதல் மற்றும் வன்முறை காரணமாக, வெளிநாட்டினர் அடிக்கடி கடத்தப்படுகின்றனர்.
கடந்த செப்டம்பரில், பமாகோவுக்கு அருகே மேற்காசிய நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த இருவர், ஈரானைச் சேர்ந்த ஒருவர் என, மூன்று பேர் கடத்தப்பட்டனர்.
பமாகோ ராணுவ அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தலைநகரில் ஜே.என்.ஐ.எம்., ஆதிக்கம் செலுத்த துவங்கியிருப்பது மாலி மக்களை கவலையடையச் செய்துள்ளது.

