இந்திய கல்வி திட்டத்தை பின்பற்றுங்க: பாகிஸ்தானுக்கு அறிவுறுத்திய ஆசிய வளர்ச்சி வங்கி!
இந்திய கல்வி திட்டத்தை பின்பற்றுங்க: பாகிஸ்தானுக்கு அறிவுறுத்திய ஆசிய வளர்ச்சி வங்கி!
ADDED : செப் 15, 2024 03:24 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் செயலிழந்த கல்வி முறையை சரி செய்யவும், மக்களுக்கு தரமான பயிற்சி அளிக்கவும், இந்தியாவின் உல்லாஸ் திட்டத்தை பின்பற்றுமாறு ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) அறிவுறுத்தியுள்ளது.
(ULLAS) உல்லாஸ் என்பது சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் பற்றிய புரிதல் திட்டமாகும். இந்த திட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இது கல்வியறிவு இல்லாதவர்கள் மற்றும் முறையான பள்ளிப்படிப்பைத் தவறவிட்ட பெரியவர்களுக்கு உதவும்.
அனைவருக்கும் கல்வி என்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் ஐந்தாண்டு காலத்திற்கு புதிய மத்திய அரசின் உல்லாஸ் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், மணிலாவை தலைமை இடமாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கியில் பாகிஸ்தான் அதன் கல்வி முறையை மேம்படுத்த நிதி உதவி கோரி இருந்தது. இதன் அடிப்படையில், ஆசிய வளர்ச்சி வங்கி, கல்விக்கான இந்தியத் திட்டத்தைப் பின்பற்றுமாறு பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியது.
பாகிஸ்தானின் கல்வி வழங்கல் முறை செயலிழந்து விட்டதாகவும், இஸ்லாமாபாத்தைத் தவிர அனைத்து 134 மாவட்டங்களும் கற்றல் முடிவுகள் முதல் பொது நிதியுதவி வரையிலான குறியீடுகளில் பின்தங்கியுள்ளன என்றும் திட்டக்குழுவின் அறிக்கை வெளிப்படுத்தியது. ஆசிய வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு சில நாட்களுக்கு முன் தான் வங்கியின் பரிந்துரை வந்தது. மசட்சுகு அசகாவா நாளை பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அதிகாரிகளை சந்திக்கிறார்.