வங்கதேசம், நேபாளம் நாடுகளை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் போராட்டம்
வங்கதேசம், நேபாளம் நாடுகளை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் போராட்டம்
UPDATED : செப் 11, 2025 05:04 PM
ADDED : செப் 10, 2025 11:57 PM

பாரிஸ் : பிரான்சில் மக்கள் நலத் திட்டங்களுக்கான பட்ஜெட்டை குறைக்கும் முடிவு மற்றும் அடிக்கடி பிரதமர்களை மாற்றும் அரசியல் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால், அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு மீது கோபமடைந்த மக்கள், அவர் பதவி விலகக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபராக இமானுவேல் மேக்ரான் உள்ளார். அந்நாட்டு அரசியலமைப்புபடி அதிபரை மக்கள் நேரடியாக தேர்வு செய்வர். அவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
அதிபருக்கு பிரதமரை தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளது. இருப்பினும் அவர் தேர்வு செய்பவர், பார்லிமென்டில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; நிரூபிக்கத் தவறினால் பதவி விலக வேண்டும்.
நிதி குறைப்பு
பிரான்ஸ் பார்லிமென்டுக்கு 2022ல் தேர்தல் நடந்தது. அதில், அதிபர் மேக்ரானின் 'ரினைசன்ஸ்' கட்சி முழு பெரும்பான்மையை பெறவில்லை. இதனால், 2024ல் பார்லி.,யை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
அதிலும் அவரது கட்சி உட்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், பட்ஜெட் மற்றும் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு, மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை அரசுக்கு உள்ளது.
இதனால், கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர். சமீபத்தில் பட்ஜெட் குறைப்பு மசோதாவை தாக்கல் செய்ய, பிரதமராக இருந்த பிராங்காய்ஸ் பாய்ரு முயற்சித்தார்.
நாட்டில் நிலவும் நிதி பற்றாக்குறை காரணமாக, அரசின் செலவினங்களை குறைக்க இந்த மசோதாவை நிறைவேற்ற அதிபர் மேக்ரான் முயற்சித்து வருகிறார்.
இதில், பொது விடுமுறை நாட்களை குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாதது, மருத்துவம், கல்வி, வீட்டு வசதி, மானியங்கள் போன்ற மக்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்கும் அம்சங்கள் உள்ளன.
இதனால், 4 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம் என அரசு கூறுகிறது.
இதற்கு, இடதுசாரி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த பிரதமர் பாய்ரு, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரினார். அதில் தோல்வி அடைந்ததால் சமீபத்தில் பதவி விலகினார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் புதிய பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார். அவர் நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில், அடுத்தடுத்து பிரதமர்கள் மாற்றப்பட்டும், அரசியல் நிர்வாகம் நிலையற்ற தன்மையில் இருப்பதை கண்டித்தும், அரசின் கடுமையான பட்ஜெட் குறைப்பு திட்டங்களுக்கு எதிராகவும், தலைநகர் பாரிஸ் உட்பட நாடு முழுதும் பொது மக்கள் நேற்று போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
இதில், இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் பங்கேற்றனர். 'எல்லாவற்றையும் முடக்கு' என்ற பெயரில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.
80,000 போலீசார்
கடந்த 2018ல் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக இதேபோல் சமூக வலைதளங்களை பயன்படுத்தி, 'மஞ்சள் உடை' போராட்டங்களுக்கு ஆட்கள் திரட்டப்பட்டனர். இந்தப் போராட்டங்கள் பல மாதங்கள் நீடித்தன.
இந்நிலையில், நேற்று பாரிஸ், ரென்னஸ், மான்ட்பெல்லியர், கான் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளை மறித்து போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர்.
பாரிசில் அவர்களை போலீசார் தடுக்க முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. தடுப்புகள், குப்பை தொட்டிகளை தீ வைத்து எரித்தனர். ரென்னஸ் நகரில் பஸ்சை கொளுத்தினர்; ரயில் நிலையங்களை தாக்கினர். இதனால், பஸ் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் 80,000 போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள், சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்பட்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போராட்டம் கட்டுக்குள் வந்தது.
இருப்பினும் வரும் 18ம் தேதி, அனைத்து தொழிற்சங்கங்களும், பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஆசிய நாடுகளான வங்கதேசம், நேபாளத்தை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் நடந்துள்ளது பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.