ADDED : ஜூலை 11, 2025 12:44 AM
குவைத் சிட்டி:குவைத்தில் 'டிவி' தொகுப்பாளர் ஒருவர் நேரலை நிகழ்ச்சியில் இருந்தபோது, உணவு வினியோக நிறுவன ஊழியர் நேரில் டெலிவரி செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான குவைத்தில் செய்தி சேனல் ஒன்றின் தொகுப்பாளர், ஆன்லைன் வாயிலாக உணவுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், 'டிவி'யில் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நேர்காணல் நிகழ்ச்சியான அதில், தொகுப்பாளரின் கேள்விக்கு ஒருவர் பதிலளித்து கொண்டு இருந்தார்.
அப்போது, உணவு வினியோகம் செய்யும் நபர் சீருடை மற்றும் பையுடன் செய்தி அறைக்குள் நுழைந்தார். அவரால் நேரலை சில வினாடிகள் தடைபட்டது.
தவறான இடத்திற்குள், தவறான நேரத்தில் நுழைந்ததை உணர்ந்த அவர் செய்தி அறையை விட்டு உடனே வெளியேறினார். இந்தக் காட்சி இணையத்தில் வெளியாகி, வேகமாக பரவியுள்ளது.
சுவாரஸ்யமான விஷயமாக இது கருதப்பட்டாலும், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, செய்தி அறையின் மேலாளரை, 'டிவி' நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.