மேட்ச் நடக்கும் போதே 'உச்சா' போன கால்பந்து வீரர்..! வெளியே போ.. ரெட் கார்டு காட்டிய நடுவர்
மேட்ச் நடக்கும் போதே 'உச்சா' போன கால்பந்து வீரர்..! வெளியே போ.. ரெட் கார்டு காட்டிய நடுவர்
UPDATED : ஆக 20, 2024 01:46 PM
ADDED : ஆக 20, 2024 12:45 PM

லிமா: கால்பந்து போட்டியின் போது உச்சா போன வீரரை நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எச்சரிக்கை
உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட போட்டியாக கால்பந்து கருதப்படுகிறது. உலக கோப்பை, ஐரோப்பிய கால்பந்து தொடரின் போது குவியும் ரசிகர்களே இதற்கு சாட்சி. ஆட்டத்தின் போது விதிகளை மீறியோ அல்லது வன்முறையாகவோ விளையாடினால் சம்பந்தப்பட்ட வீரர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவர்.
ரெட் கார்டு
அண்மையில் பெருவில் நடந்த கால்பந்து போட்டியில் ஆட்டத்தின் நடுவே சிறுநீர் கழித்த வீரரை ரெட் கார்டு காட்டி போட்டியில் இருந்து நடுவர் வெளியேற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:
விறுவிறு போட்டி
கோபா பெரு கால்பந்து போட்டியில் atletico awajun அணியும், Canttorcillo FC அணியும் மோதின. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் atletico awajun அணி வீரர் செபாஸ்டியன் முனோஸ் என்பவர் திடீரென எல்லைக் கோட்டை தாண்டி வெளியில் சென்றார்.
சிவப்பு அட்டை
அடுத்த சில நொடிகளில் அனைவர் முன்னிலையில் அவர் சிறுநீர் கழிக்க ஆரம்பித்துள்ளார். எதிர்பாராத அவரின் இந்த செயலை கண்ட எதிரணி வீரர்கள் ஆட்ட நடுவரிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக செயல்பட்ட அவர், செபாஸ்டியன் முனோசை எச்சரித்தார். அடுத்த சில நொடிகளில், சட்டை பையில் இருந்த சிவப்பு அட்டையை எடுத்துக் காட்டி உடனடியாக ஆட்டக்களத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.
வைரல் வீடியோ
என்ன நடக்குது என்று புரியாமல் செபாஸ்டியன் முனோஸ் ஒரு கணம் தடுமாறியபடி வெளியேற, இந்த காட்சியை ரசிகர் ஒருவர் தமது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். பலரும் கடுமையாக விமர்சிக்க,இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

