அமெரிக்கர்களின் கனவுகளை திருடும் வெளிநாட்டினர்: டிரம்ப் நிர்வாகம் குற்றச்சாட்டு
அமெரிக்கர்களின் கனவுகளை திருடும் வெளிநாட்டினர்: டிரம்ப் நிர்வாகம் குற்றச்சாட்டு
UPDATED : அக் 31, 2025 08:44 PM
ADDED : அக் 31, 2025 08:42 PM

நியூயார்க்: அமெரிக்காவில் எச்1 பி விசாவை பயன்படுத்தி அமெரிக்கர்களின் கனவுகளை வெளிநாட்டினர் திருடி வருகின்றனர் என அமெரிக்க தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து டொனால்டு டிரம்ப், எச்1 பி விசா மற்றும் குடியேற்ற விதிகளில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறார். இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தினார். இதன் பிறகு, ஏற்கனவே விசா வைத்துள்ளவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து, குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்கும் நடவடிக்கையாக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பணி உரிமத்தை தானாக புதுப்பிப்பதை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டு, உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்தியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க தொழிலாளர் துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எந்தெந்த நாடுகளுக்கு எச்1பி விசா அ திகம் வழங்கப்படுகிறது என்பதுடன், இந்தியர்களுக்கு 72 சதவீத விசா வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த வீடியோவில், அமெரிக்க மக்களிடம் இருந்து அமெரிக்க கனவுகள் திருடப்படுகின்றன. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எச்1 பி விசாவை தவறாக பயன்படுத்த அனுமதித்ததால், பல இளம் அமெரிக்கர்களின் கனவை வெளிநாட்டு தொழிலாளர்கள் திருடியுள்ளனர். டிரம்ப்பின் திட்டத்தால், எச்1பி விசா தவறாக பயன்படுத்தப்படுவதற்கு நிறுவனங்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் அமெரிக்கர்களை தேர்வு செய்ய முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

