இருப்பது இந்தியாவில்: வழக்கு வங்கதேசத்தில்: மாஜி பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு
இருப்பது இந்தியாவில்: வழக்கு வங்கதேசத்தில்: மாஜி பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு
ADDED : ஆக 13, 2024 02:55 PM

டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மளிகைக் கடைக்காரர் அபு சயீத் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள், போலீசார், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் என்பவர் டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அபு சயீத் கொல்லப்பட்டதற்கு ஷேக் ஹசீனா உள்ளிட்ட 6 பேர்தான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விசாரணைக்கு வர உள்ளது. இதனையடுத்து ஷேக் ஹசீனா உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த நிலையில், பதியப்பட்ட முதல் வழக்கு இது.

