நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி
UPDATED : செப் 12, 2025 09:57 PM
ADDED : செப் 12, 2025 07:30 PM

காத்மாண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி இன்று( செப்.,12) இரவு பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அந்நாட்டில் பிரதமர் ஆன முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட், தலைமை செயலகம், உச்சநீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இல்லங்களை சூறையாடினார். நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்து தேர்தல் நடக்கும்வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமரை தேர்வு செய்யும் பணி நடந்தது. காத்மாண்டு மேயர் பாலென் ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் ஆகியோரை போராட்டக் குழுவினர் பரிந்துரைத்தனர்.
இதில், பாலென் ஷா தனக்கு விருப்பம் இல்லை என அறிவித்து விட்டார். சுசீலா கார்கி, மற்றும் குல்மான் கிஷிங் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வதில் மாணவர்கள் அமைப்பினர் இடையே குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் அதிபர், ராணுவம், மாணவர் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இன்று இரவு அவர் பதவியேற்றுக் கொண்டார். தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்கும் வரை, அவர் இந்தப்பதவியில் இருப்பார்.