பிரிட்டனில் நான்கு நாள் கலவரத்தில் ரூ.1,500 கோடி "அவுட்': விடிய, விடிய இயங்கிய கோர்ட்
பிரிட்டனில் நான்கு நாள் கலவரத்தில் ரூ.1,500 கோடி "அவுட்': விடிய, விடிய இயங்கிய கோர்ட்
UPDATED : ஆக 12, 2011 01:08 AM
ADDED : ஆக 11, 2011 11:51 PM

லண்டன்:லண்டனில், கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்த கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த நான்கு நாட்களுக்கு முன், லண்டனில் உள்ள டோட்டன்ஹேம் பகுதியைச் சேர்ந்த பிரபல தாதா, மார்க் டக்கன், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், டக்கன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. டோட்டன்ஹேம் நகரின் பல இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த கலவரம் மேலும் சில நகரங்களுக்கும் பரவியது. பிரதமர் டேவிட் கேமரூன், இத்தாலி பயணத்தை பாதியில் முடித்து லண்டன் திரும்பினார்.'எந்த விலை கொடுத்தாலும் கலவரத்தை ஒடுக்குவோம்' என, அவர் உறுதியளித்தார். கலவரம் தொடர்பாக விவாதிக்க பார்லிமென்டின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. கலவரம் தொடர்பாக நடந்த விஷயங்களை அமைச்சர்கள் பார்லிமென்டில் எடுத்துரைத்தனர்.கலவர பகுதிகளில் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு உதவ ஸ்காட்லாந்து போலீசார், 250 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 300 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரக்காரர்களை உடனடியாக சிறையில் அடைக்கும் பொருட்டு லண்டன் கோர்ட் நேற்று முன்தினம் நள்ளிரவு முழுவதும் இயங்கியது.கடந்த நான்கு நாள் கலவரத்தில், 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இழப்பீடு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியர்கள் மீது தாக்குதல்:லண்டனில் நடந்த, நான்கு நாள் கலவரத்தில், மூன்று பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். க்ராய்டான் பகுதியில், இந்தியரின் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. அந்தக் குடும்பத்தினர், மொபைல்போனை தவிர, அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.பர்மிங்காம் பகுதியில் உள்ள, சீக்கியர்களின் ஏராளமான கடைகள், கலவரத்தின் போது அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சீக்கியர்கள் தங்களிடம் உள்ள குறு வாளையும், ஹாக்கி மட்டைகளையும் ஏந்திக்கொண்டு, பாதுகாப்புக்காக நின்றனர்.