ADDED : ஆக 11, 2025 03:42 AM

காத்மாண்டு: மலை சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், குறைந்த உயரமுடைய 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம் என, நேபாள அரசு அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து, 29,031 அடி உயரத்தில் உள்ளது. இந்த சிகரத்தில் ஏற ஒருவருக்கு, 10 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது செப்., 1 முதல், 13 லட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது.
இந்நிலையில், மலை சுற்றுலாவை மேம்படுத்த குறைவான உயரமுடைய, 97 சிகரங்களில் இலவசமாக ஏறலாம் என, நேபாள அரசு நேற்று அறிவித்தது. இதன்படி, கர்னாலி, சுதுர்பாஷ்சிம் மாகாணங்களில், 19,000 அடி உயரம் முதல், 23,000 அடி உயரம் வரை உள்ள, 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம். இதற்கு கட்டணம் கிடையாது.
தொலைதுாரப் பகுதிகளுக்கு அதிக பார்வையாளர்களை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உள்ளூர் சமூகங்களுக்கு வருமானத்தை ஈட்டுவதே இதன் நோக்கம் என, நேபாள அரசு தெரிவித்துள்ளது. உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு முன், குறைந்த உயரமுடைய சிகரத்தில் ஏறியிருக்க வேண்டும் என்பதையும் நேபாள அரசு பரிந்துரைத்துள்ளது.