கவிழந்தது பிரான்ஸ் அரசு! பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு ராஜினாமா
கவிழந்தது பிரான்ஸ் அரசு! பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு ராஜினாமா
ADDED : செப் 09, 2025 12:14 AM

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது.
பிரான்ஸ் நாட்டின் அதிபராக மேக்ரோன் பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட பார்லியில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார்.
அவர் 2024 செப்டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது பிரதமராக பிராங்காய்ஸ் பதவியேற்றார்.
இப்படி 9 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த பிராங்காய்ஸ் பாய்ருவுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, இந்த நம்பிக்கை ஓட்டுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டு பார்லியில் மொத்தம் 577 உறுப்பினர்கள் உள்ளனர். அவை கூடியதும், தன் மீது நம்பிக்கை வைத்து அரசுக்கு ஓட்டு அளிக்குமாறு உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் உரை நிகழ்த்துவார். அதை தொடர்ந்து ஓட்டெடுப்பு நடக்கும்.
அவரது அரசு தப்பிக்க வேண்டுமெனில், பெரும்பான்மை உறுப்பினர்கள் நம்பிக்கை இருப்பதாக ஓட்டளிக்க வேண்டும். இல்லையெனில் அரசு கவிழ்ந்து விடும். அப்படி கவிழும் பட்சத்தில் பிரான்ஸ் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்படும். புதிய பிரதமரை கண்டறிந்து பதவியேற்கச் செய்ய வேண்டிய நெருக்கடி அதிபர் மேக்ரோனுக்கு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறினர்.
பிரான்ஸ் பார்லியில், அரசுக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்தோரின் எண்ணிக்கை 320 என்ற அளவில் உள்ளது. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பிராங்காய்ஸ் பாய்ரு ராஜினாமா செய்தார்.
முன்னதாக அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் கூட தனக்கு எதிராக கூட்டணி சேர்ந்து கொண்டு செயல்படுவதாக, பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம்இதுவரை அதிபர் மேக்ரோன் ஆட்சியில் 4 முறைபிரதமர்கள் ராஜினாமாசெய்துள்ளனர்.