ஒலிம்பிக்கை சீர்குலைக்க நாசவேலை: பாரிஸ் ரயில் தடங்களில் தீ வைப்பு
ஒலிம்பிக்கை சீர்குலைக்க நாசவேலை: பாரிஸ் ரயில் தடங்களில் தீ வைப்பு
UPDATED : ஜூலை 27, 2024 05:29 PM
ADDED : ஜூலை 26, 2024 05:08 PM

பாரிஸ் : பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன், அந்நாட்டின் அதிவிரைவு ரயில் தடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததை அடுத்து, ரயில் சேவை முற்றிலுமாக முடங்கியது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டியை காண திட்டமிட்டிருந்த எட்டு லட்சத்திற்கும் அதிகமான பயணியர், பாரிஸ் வந்தடைய முடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவித்தனர். இதற்கு நாசவேலை காரணம் என கூறப்படுகிறது.
சிக்னல் சேதம்
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நேற்று இரவு நடந்தது. இதற்காக பாரிஸ் முழுதும் விழா கோலம் பூண்டுள்ளது. வார இறுதி நாள் என்பதால், பிரான்சை சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும், ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண மக்கள் பாரிஸ் வந்தவண்ணம் உள்ளனர். பாரிஸ் நகரத்தை, பிரான்ஸ் உடன் மட்டுமின்றி, பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் டி.ஜி.வி., என்ற அதிவேக ரயில்வே சேவை, அந்நாட்டில் முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது.
பாரிசில் உள்ள மிக முக்கியமான மான்ட்பர்னாஸ் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள அட்லான்டிக், நார்டு மற்றும் எஸ்ட் வழித்தடங்களில் உள்ள மூன்று இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நேற்று அதிகாலை
நடந்துள்ளன.இதையடுத்து, பாரிஸ் நகரத்தை நோக்கி வரும் பல்வேறு அதிவேக ரயில் தடங்களில் போக்கு வரத்து தடைபட்டது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த தீ வைப்பு தாக்குதலில், சில ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் சிக்னல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், அதிவேக ரயில் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. இவற்றை சரிசெய்ய, குறைந்தது வார இறுதி நாட்கள் முழுதும் தேவைப்படும் என கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் பல இடங்களில் நடப்பட்ட இந்த தாக்குதலால், பாதி ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தேசிய ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரயில்களை மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விட்டாலும், கணிசமான எண்ணிக்கையில் ரயில் சேவைகளை ரத்து செய்ய வேண்டியிருக்கும் என, பிரான்ஸ் அதிவேக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பயணியர் சிரமத்தை தவிர்க்க, ரயில் பயணங்களை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணை
இது குறித்து பிரான்ஸ் போக்குவரத்து துறை அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் கூறுகையில், ''ஒலிம்பிக் துவக்க விழாவையும், வார இறுதி நாட்களையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. போக்குவரத்தை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார். இந்த தாக்குதலுக்கு நாசவேலை காரணம் என தெரிய வந்தாலும், அதில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில் சேவை பாதிப்பால் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.