விண்வெளி முதல் -'செமிகண்டக்டர்' வரை ஜோ பைடன் - மோடி விரிவான பேச்சு
விண்வெளி முதல் -'செமிகண்டக்டர்' வரை ஜோ பைடன் - மோடி விரிவான பேச்சு
ADDED : செப் 23, 2024 01:15 AM

வில்மிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியை தன் இல்லத்துக்கு அழைத்து, அமெரிக்கா - இந்தியா உறவு குறித்து அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் உரையாடினார்.
அப்போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் முதல், விண்வெளி தொழில்நுட்பம் வரை இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
'குவாட்' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக, டெலாவர் மாகாணத்தின், வில்மிங்டன் என்ற இடத்தில் உள்ள அதிபர் ஜோ பைடனின் கிரீன்வில் என்ற இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.
அவரை ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் பைடன், மோடியை கைபிடித்து இல்லத்திற்குள் அழைத்து சென்றார். இரு தலைவர்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாடினர்.
'இந்தியா - அமெரிக்கா உறவை வலுப்படுத்துவது இந்த சந்திப்பின் மையமாக இருந்தது. இந்தோ - பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்' என, நம் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
உலக அரங்கில் இந்தியா
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிற நாடுகளுக்கு உதவியது முதல், உலகெங்கிலும் நிகழும் மோதல்களுக்கு தீர்வு காண முயலும் இந்தியாவின் முயற்சியை அதிபர் பைடன் பாராட்டினார்.
பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் அளிப்பது குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்களை அதிபர் பைடன் வரவேற்றார்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில்
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்து, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்ற மோடியின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக பைடன் உறுதி அளித்தார்.
செமிகண்டக்டர் ஆலை
தேசிய பாதுகாப்பு, அடுத்த தலைமுறை தொலைதொடர்பு மற்றும் பசுமை எரிசக்தி பயன்பாடுகளுக்கான புதிய செமி கண்டக்டர் ஆலையை, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் இரு நாடுகளும் இணைந்து நிறுவுவதற்கான ஏற்பாட்டிற்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
விண்வெளி ஆய்வு
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து, 2025ல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இஸ்ரோ வீரர்கள் மேற்கொள்ள இருக்கும் ஆய்வு குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
எம்க்யூ - 9பி ட்ரோன்கள்
நம் நாட்டின் முப்படைகளுக்கு, எம்க்யூ - 9பி ரக ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை வழங்க, கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. 33,000 கோடி ரூபாய்க்கு 31 ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் என, அதிபர் பைடன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பசுமை எரிசக்தி
பாதுகாப்பான, பசுமை எரிசக்தி வினியோகத் தொடர்களை உருவாக்குவதற்காக, இந்தியா - அமெரிக்கா இடையிலான ஒப்பந்தங்களை இரு தலைவர்களும் பாராட்டினர்.