தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஜிம்பாப்வேயில் ஈமச்சடங்கு காப்பீடுக்கு முன்னுரிமை

 ஜிம்பாப்வேயில் ஈமச்சடங்கு காப்பீடுக்கு முன்னுரிமை

 ஜிம்பாப்வேயில் ஈமச்சடங்கு காப்பீடுக்கு முன்னுரிமை


ADDED : பிப் 04, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹராரே: ஜிம்பாப்வேயில் நிலவும் பொருளாதார சூழல் காரணமாக, அந்நாட்டு மக்கள் மருத்துவக் காப்பீட்டை விட ஈமச்சடங்கு காப்பீட்டிற்கு முன்னுரிமை கொடுக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில், ஒருவரை அடக்கம் செய்வது என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல; அது அவருக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய மரியாதையாக கருதப்படுகிறது.

பணப்பற்றாக்குறையால் இறுதிச் சடங்கு தடைபடுவதோ அல்லது தரம் குறைந்து போவதோ இறந்தவரின் குடும்பத்துக்கு அவமானதாக கருதப்படுகிறது.

ஆனால், நாட்டின் பணவீக்கம் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தாங்கள் வாழும் காலத்துக்கான செலவுகளை விட மரணத்துக்கு பிந்தைய செலவுகளுக்காக அதிகம் சேமிக்கும் துரதிருஷ்டவசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மருத்துவக் காப்பீட்டிற்கான மாதாந்திர கட்டணம் என்பது ஜிம்பாப்வேயில் சராசரி மனிதனின் வருமானத்தை விட மிக அதிகமாக உள்ளது.

மருத்துவக் காப்பீடு வைத்திருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, காப்பீட்டு தொகை போக மீதி தொகையை கையில் இருந்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதையும் அமெரிக்க டாலர்களாக வழங்க வேண்டிய நிலை நிலவுகிறது. காப்பீடு இருந்தும், பணம் இல்லையென்றால், சிகிச்சை மறுக்கப்படும் நிலை அங்குள்ளது.

ஆனால், ஈமச்சடங்கு காப்பீட்டில் இத்தகைய மறைமுக செலவுகள் குறைவு. மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால், ஏழை, எளிய மக்கள் இதை எளிதாக எடுக்க முடிகிறது.

ஒருவர் இறந்த உடன் சவப்பெட்டி வாங்குவது, உறவினர்களுக்கு உணவு வழங்குவது, உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வது என, உடனடியாக பெரிய தொகை தேவைப்படும்.

இந்த செலவுகளை ஈமச்சடங்கு காப்பீடு உடனடியாக ஏற்றுக் கொள்வதால், குடும்பத்தினர் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

ஒரு நபர் இறக்கும் போது, அவரது குடும்பம் கடனாளியாகிவிடக் கூடாது என்பதற்காகவே இக்காப்பீட்டை எடுக்க அந்நாட்டு மக்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர்.

ஜிம்பாப்வே மக்கள், உயிருடன் இருக்கும்போது, தரமான சிகிச்சை பெறுவது தங்களுக்கு எட்டாக்கனி என்பதை உணர்ந்துள்ளனர்.

எனவே, குறைந்தபட்சம் இறக்கும் போதாவது கடனில்லாமல் கவுரவமாக இறக்க வேண்டும் என, எதார்த்தமான முடிவை அவர்கள் எடுக்கின்றனர்.

* ஜிம்பாப்வேயில், மாதத்திற்கு சராசரியாக மருத்துவ காப்பீட்டிற்கு 18,000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. ஜிம்பாப்வேயில் 90 சதவீதம், அதாவது 1.6 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை * ஈமச்சடங்கு காப்பீடுக்கு மாதம் 68 முதல் 990 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. ஆகையால், 72 சதவீதம் பேர் ஈமச்சடங்கு காப்பீட்டையே வைத்துள்ளனர் * நாட்டின் 60 சதவீதம் மக்கள் ஒரு நாளைக்கு 329 ரூபாய்க்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ காப்பீடு என்பது ஒரு ஆடம்பரமேயாகும்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us