இந்தியா மீது கூடுதல் வரி விதிக்க ஜி - 7 நாடுகளுக்கு நெருக்கடி
இந்தியா மீது கூடுதல் வரி விதிக்க ஜி - 7 நாடுகளுக்கு நெருக்கடி
ADDED : செப் 14, 2025 12:32 AM

வாஷிங்டன்:ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும் என, ஜி - 7 நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டார்.
இதற்காக இந்தியா மீது, 25 சதவீதம் கூடுதல் வரி உட்பட 50 சதவீதம் வரி விதித்துள்ளார்; மற்ற நாடுகளுக்கும் வரியை விதித்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரி விதிக்கும்படி, 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், உலகின் பெரும் பணக்கார நாடுகள் அடங்கிய, ஜி - 7 அமைப்பைச் சேர்ந்த நாடுகளையும், கூடுதல் வரி விதிக்க அவர் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக விவாதிப்பதற்காக, வட அமெரிக்க நாடான கனடாவின் நிதியமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் ஷாம்பெயின் தலைமையில், ஜி - 7 நாடுகள் நிதியமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எந்தெந்த வகைகளில் வரி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், உக்ரைனுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பது தொடர்பான உறுதிமொழியை நிறைவேற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.