டிரெஸ்ஸிங் ரூமில் டோஸ் விட்ட கம்பீர்; மீடியாவுக்கு கசிந்தது எப்படி? முன்னாள் வீரர்கள் கண்டனம்
டிரெஸ்ஸிங் ரூமில் டோஸ் விட்ட கம்பீர்; மீடியாவுக்கு கசிந்தது எப்படி? முன்னாள் வீரர்கள் கண்டனம்
UPDATED : ஜன 02, 2025 08:09 PM
ADDED : ஜன 01, 2025 05:48 PM

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, இந்திய வீரர்களை பயிற்சியாளர் கம்பீர் ஆவேசமாக திட்டியுள்ளார். இந்த விவகாரம் மீடியாக்களுக்கு கசிந்ததற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், சிட்னி டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே, தொடரை சமன் செய்து, பார்டர் -கவாஸ்கர் டிராபியை தக்க வைக்க முடியும். அதேவேளையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.
கடந்த ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றார். அப்போது, முதற்கொண்டு, இந்திய அணி வரலாறு காணாத தோல்விகளை சந்தித்து வருகிறது. சொந்த மண்ணில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனது. அதேபோல, பல ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையிடம் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. தற்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பார்டர் - கவாஸ்கர் தொடரையும் பறிகொடுக்கும் சூழலில் இந்திய அணி உள்ளது.
இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவும், பயிற்சியாளர் கம்பீரும் பதில் சொல்ல வேண்டிய சூழலில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், மெல்போர்ன் போட்டி தோல்விக்குப்பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் பயிற்சியாளர் கம்பீர் கடுமையாக நடந்து கொண்டதாக ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. எந்த ஒரு வீரரையும் குறிப்பிட்டு பேசாத கம்பீர், ரோகித், விராட் கோலி, பண்ட் ஆகிய முன்னணி வீரர்களை மனதில் வைத்தே ஆவேசமாக பேசியதாக சொல்லப்படுகிறது.
டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த விஷயங்கள் மீடியாக்களில் செய்தியாக வந்தது முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஸ்ரீவத்ஸா கோஸ்வாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் பேசியது எப்படி மீடியாக்களுக்கு கசிந்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.