அதிகாரிகளுக்கு லஞ்சம்; அதானி மீது அமெரிக்கா 'பகீர்' குற்றச்சாட்டு
அதிகாரிகளுக்கு லஞ்சம்; அதானி மீது அமெரிக்கா 'பகீர்' குற்றச்சாட்டு
UPDATED : நவ 21, 2024 02:15 PM
ADDED : நவ 21, 2024 07:17 AM

வாஷிங்டன்: 'தொழிலதிபர் அதானி சூரிய ஓளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்' என அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய பணக்காரர் அதானி. உலகளவில் 22வது இடத்தில் உள்ளார். இவர் மீது அமெரிக்கா மிகப்பெரிய குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இது குறித்து நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. '2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில், சூரிய ஓளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்கள் லஞ்சம் அதானி கொடுத்துள்ளார்.
லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை திரட்டினார். அதானியின் செயல் சட்டப்படி தவறானது' என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதானியின் உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீதும் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. இதே புகாரில் அமெரிக்கா பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து அதானியோ, இந்திய தூதரகமோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
அதானி குழுமம், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் நிறுவன பங்குகளை போலியாக அதிகரிக்கச் செய்வதாக அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமம் மறுப்பு
அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சப் புகாரில் அதானி மீது அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; அவற்றை மறுக்கிறோம். அமெரிக்காவின் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம்; குற்றம் நிரூபணமாகும் வரை ஒருவர் நிரபராதி என்று அந்நாட்டு சட்டத்திலேயே உள்ளது. நாங்கள் எங்கள் பங்குதாரர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம் என்று உறுதியளிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.