ADDED : ஆக 06, 2024 04:59 AM

பாரிஸ்: ஒலிம்பிக் கிராமத்தில் வசதிகள் சரியில்லை என்பதால், பார்க்கில் படுத்து உறங்கினார் தாமஸ் செக்கான்.
ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், 100 மீ., பேக்ஸ்டிரோக் பிரிவில் தங்கம் வென்றார் இத்தாலியின் தாமஸ் செக்கான்(23). தவிர 4x100 மீ., பிரீஸ்டைல் 'ரிலே' போட்டியில், சக வீரர்களுடன் இணைந்து வெண்கலம் கைபற்றினார். அப்போது தனது வயிற்றுப் பகுதியை காண்பித்த இவரை, உலகின் கவர்ச்சியான நீச்சல் வீரர் என அழைத்தனர்.
அடுத்து 200 மீ., பேக்ஸ்டிரோக் பிரிவு பைனலுக்கு முன்னேற முடியாத விரக்தியில் இருந்த தாமஸ், ஒலிம்பிக் கிராமத்தில் போதிய வசதிகள் இல்லை என புகார் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 'ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள அறையில் மதியம், இரவு என எப்போதும் தூங்க முடிவது இல்லை. வழக்கமாக மதியத்துக்குப் பின் தூங்கி ஓய்வெடுப்பேன். இது முடியாததால், எப்போதும் சோர்வாக இருப்பது போல உணர்கிறேன். போதிய ஏ.சி., வசதி இல்லை. உணவின் தரமும் மோசமாக உள்ளது. பல நாடுகளின் வீரர்களுக்கும் இதே நிலை தான் உள்ளது,' என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே பாரிசில் உள்ள பார்க்கில், தாமஸ் துண்டை விரித்து உறங்கும் போட்டோவை, சவுதி அரேபிய படகு வலித்தல் வீரர் ஹூசைன் வெளியிட்டார். இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.