ரஷ்யாவுக்காக போரிட்டு உக்ரைனிடம் சரணடைந்த குஜராத் இளைஞர்
ரஷ்யாவுக்காக போரிட்டு உக்ரைனிடம் சரணடைந்த குஜராத் இளைஞர்
ADDED : அக் 08, 2025 11:54 PM

மோர்பி: ரஷ்யாவுக்காக போரிட்டு சமீபத்தில் உக்ரைன் ராணுவத்திடம் சரணடைந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன், 22, என்பவர் குஜராத்தின் மோர்பி நகரில் இருந்து படிப்புக்காக ரஷ்யா சென்றவர் என்பதை அம்மாநில போலீஸ் உறுதி செய்தது.
ரஷ்யா - உக்ரைன் இடையே, 2022 முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ரஷ்ய வீரர்கள் மட்டுமின்றி பணத்திற்கு ஆசைப்பட்டு, வடகொரிய இளைஞர்களும், இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், சிறைபிடித்த ரஷ்ய போர் வீரர்களின் வீடியோக்களை உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த வீடியோவில் ஒருவர், 'தன்னை மஜோதி சாஹில் முகமது ஹுசைன், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்' என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மேலும், வீடியோவில் அவர் கூறுகையில், 'ரஷ்யாவில் போதை பொருள் சம்பந்தமான குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றேன். சிறையில் இருந்து தப்பிக்க, ரஷ்ய ராணுவத்தில் சேரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்' என தெரிவித்தார்.
அவருக்கு, 16 நாட்கள் ராணுவ பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் அக்டோபர் 1 முதல் போரில் ஈடுபட்டுஉள்ளார். அங்கு தளபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், உக்ரைன் படையிடம் சரணடைந்து உள்ளார்.
இது குறித்து குஜராத் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, சரணடைந்த சாஹில், குஜராத்தின் ேமார்பி நகரை சேர்ந்தவர், படிப்புக்காக பல ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா சென்றவர் என்பதை உறுதி செய்தனர்.