ADDED : ஆக 01, 2024 03:28 PM

டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ தளபதியாக செயல்பட்ட முகமது டெயிப் உயிரிழந்தார். இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. சமரச முயற்சிகள் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் மறுபக்கம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். நேற்று( ஜூலை 31) ஈரான் தலைநகர் தெஹ்ரானில், அந்த அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. அதில், அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், அந்த அமைப்பின் ராணுவ தளபதியாக இருந்த முகமது டெயிப் என்பவர், கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி, இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதனை தற்போது, இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். இவர், கடந்த அக்., 7 ல் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழக்க காரணமான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர் ஆவார்.
இவரை, பல முறை கொல்ல இஸ்ரேலிய படைகள் முயற்சித்தன. அதில் தப்பி வந்த நிலையில், உளவுத்துறையினர் அளித்த தகவல் அடிப்படையில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்கு தற்போது முகமது டெயிப் உயிரிழந்துள்ளார். இது பாலஸ்தீனிய அமைப்புக்கும், அந்த அமைப்பை ஆதரிக்கும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.