யாஹ்யா சின்வார் மரணத்தை உறுதி செய்தது ஹமாஸ்: பிணைகைதிகளை விடுவிக்க நிபந்தனை
யாஹ்யா சின்வார் மரணத்தை உறுதி செய்தது ஹமாஸ்: பிணைகைதிகளை விடுவிக்க நிபந்தனை
ADDED : அக் 18, 2024 09:25 PM

காசா: ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. காசாவில் போரை நிறுத்தினால் மட்டுமே பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இவர்கள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் போரில், காசாவில் 40,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர். இதை இஸ்ரேல் அரசு உறுதி செய்தது. யாஹ்யா சின்வர் கடந்த ஆண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர்.
யாஹ்யா சின்வர் உயிரிழந்ததை அந்த அமைப்பின் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். படைகள் முற்றிலும் திரும்பப்பெற வேண்டும். சிறையில் உள்ள எங்கள் அமைப்பினர் விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவரை, இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.