ஆயுதங்களை ஒப்படைக்க தயார் 6 மாதத்திற்கு பிறகு ஹமாஸ் முடிவு
ஆயுதங்களை ஒப்படைக்க தயார் 6 மாதத்திற்கு பிறகு ஹமாஸ் முடிவு
ADDED : ஏப் 21, 2026 01:40 AM
காசா: ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் போலீஸ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புப் படையினரிடம் உள்ள ஆயிரக்கணக்கான தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட சில ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023ல் போர் தொடங்கியது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டு, போரை நிறுத்த பேச்சு நடத்தியதுடன், காசாவை மீட்டெடுக்க அமைதி வாரியம் ஒன்றையும் அமைத்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்து ஆறு மாதங்களை கடந்துள்ளது .
இந்தநிலையில், தங்கள் போலீஸ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையினரிடம் உள்ள ஆயிரக்கணக்கான தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட சில ஆயுதங்களை ஒப்படைக்க தயா ராக இருப்பதாக ஹமாஸ் பயங்கரவாதிகள் தற்போது அறிவித்துள்ளனர்.
இந்த ஆயுதங்கள், டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியம் மூலம் அமைக்கப்பட்ட பாலஸ்தீனிய நிர்வாகக் குழுவுக்கு மாற்றப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், ஹமாசின் ராணுவப் பிரிவு வைத்திருக்கும் பீரங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை ஒப்படைக்க மாட்டோம் என்று அவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில், ஹமாஸ் அதிகாரிகளும், அமைதி வாரிய பிரதிநிதிகளும் நடத்தி வரும் பேச்சின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
