போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டம்; பிணைக்கைதிகள் 4 பேர் சடலமாக ஒப்படைப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டம்; பிணைக்கைதிகள் 4 பேர் சடலமாக ஒப்படைப்பு
ADDED : பிப் 27, 2025 07:20 AM

ஜெருசலேம்: நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் வரை காத்திருந்த ஹமாஸ் நான்கு இஸ்ரேல் பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த 2023 அக்., 7ல் எதிர்பாராத தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 48,319 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஐ.நா., முயற்சியால் ஜன.19 முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் அரசு பாலஸ்தீன கைதிகளையும், ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் நான்கு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கடைசி பரிமாற்றம் இதுவாகும். போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில், மொத்தம் இஸ்ரேல் பிணைக்கைதிகள் 33 பேரும், பாலஸ்தீனர்கள் 2 ஆயிரம் பேரும் பரிமாறி கொள்ளப்பட்டனர். 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.