ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு வங்கதேச அரசு கடிதம்
ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு வங்கதேச அரசு கடிதம்
ADDED : டிச 23, 2024 04:52 PM

டாக்கா: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் வங்கதேச அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஆன 77 வயதான ஹசீனா, மாணவர்கள் போராட்டங்களால் ஆட்சியை இழந்து, நாட்டை விட்டு வெளியேறினார்.
கடந்த ஆகஸ்ட் 5 முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஹசீனா, அவரது மாஜி அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவிற்கு திருப்பி அனுப்ப, இந்தியாவில் உள்ள தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வங்க தேச இடைக்கால அரசு இன்று தெரிவித்துள்ளது.
நீதித்துறை நடவடிக்கைக்காக, ஹசீனாவை திரும்ப அழைக்க விரும்புவதாக, இந்திய அரசிற்கு வாய்மொழியாக ஒரு குறிப்பு அனுப்பியுள்ளோம் என்று தற்போதுள்ள வெளியுறவு அமைச்சர் தவுகித் ஹூசைன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் கூறுகையில், ஹசீனாவை நாடு கடத்துவதற்கு வசதியாக வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
டாக்காவிற்கும் புது டில்லிக்கும் இடையில் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தம் ஏற்கனவே இருப்பதாகவும், அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்பக் கொண்டுவரப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.