மேஜிக் நிகழ்த்திய ஹாரி கேன்; காங்கோவை வீழ்த்தியது இங்கிலாந்து
மேஜிக் நிகழ்த்திய ஹாரி கேன்; காங்கோவை வீழ்த்தியது இங்கிலாந்து
ADDED : ஜூலை 01, 2026 11:56 PM

அட்லாண்டா: பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின், ரவுண்ட் -32 சுற்றில், இங்கிலாந்து அணி, காங்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரி கேன், 2 கோல் அடித்து அசத்தினார்.
ஆரம்பமே அதிர்ச்சி:
ஆட்டம் துவங்கிய 7வது நிமிடத்தில், இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தரும் வகையில், காங்கோ வீரர் பிரையன் சிபெங்கா கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் உடனடியாக கோல் போட முடியவில்லை. முதல் பாதி முடிவில், காங்கோ அணி 1-0 என முன்னிலை வகித்தது.
'ஹீரோ' ஹாரி கேன்:
நீண்ட நேரம் கோல் அடிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்துக்கு, 75வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ஹாரி கேன் கோல் அடித்து, போட்டியை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.. தொடர்ந்து அசத்திய அவர், 86வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து, இங்கிலாந்தை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி, பலனளிக்கவில்லை. முடிவில், இங்கிலாந்து அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியது. இறுதி வரை போராடிய காங்கோ அணி, பரிதாபமாக தொடரை விட்டு வெளியேறியது.
