கடும் நிதி பற்றாக்குறை; 70 நாடுகளில் உலக சுகாதார நிறுவன பணி முடங்கும் அபாயம்!
கடும் நிதி பற்றாக்குறை; 70 நாடுகளில் உலக சுகாதார நிறுவன பணி முடங்கும் அபாயம்!
UPDATED : மே 19, 2025 07:21 PM
ADDED : மே 19, 2025 07:00 PM

ஜெனீவா: நிதி பற்றாக்குறை காரணமாக, 70 நாடுகளின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.,) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பாகும். இது உலகெங்கிலும் உள்ள பொது சுகாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், சர்வதேச அளவில் சுகாதார நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கவும், பொது சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கவும் செயல்படுகிறது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதானோம் உள்ளார்.
வளரும் நாடுகள், வறுமை நிலையில் இருக்கும் நாடுகளில் இந்த அமைப்பின் பணியாளர்கள் சுகாதார சேவை அளித்து வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்புக்கு நிதிப் பிரச்னை பெரிய அளவில் ஏற்பட்டு வருகிறது.இந்த அமைப்புக்கு அதிகப்படியான நிதி வழங்கி வந்த அமெரிக்கா, வெளியேறப்போவதாக அறிவித்து விட்டது. இதனால் வரும் ஆண்டுகளில் நிதி நிலை மோசமாகும். இதை எதிர்பார்த்து, தங்களது நிறுவனத்தின் துறைகளை பாதிக்குப்பாதியாக குறைப்பது என்றும், பணியாளர்கள் செலவினத்தை கணிசமாக குறைப்பது என்றும் உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.நிதிப் பற்றாக்குறையால் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ சேவைகள், பாதிக்கப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. 'நிதி பங்களிப்புக்கு இனி சீனாவை நம்ப வேண்டியது இருக்கும்' என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலக சுகாதார நிறுவன நிர்வாக இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:
தற்போது ஆண்டு பட்ஜெட்டில் 600 மில்லியன் டாலர் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 21 சதவீத நிதி பற்றாக்குறை எதிர்கொள்ள நேரிடும். இது குறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரிகள், இன்று முதல் ஜெனீவாவில் நன்கொடையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆலோசித்தனர். மருத்துவ சேவை நெருக்கடிகளை, முக்கிய நிதி வழங்கும் நாடான அமெரிக்கா இல்லாமல் எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதித்து வருகின்றனர்.
நிதி பற்றாக்குறையால், 70 நாடுகளில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும். அடிப்படை சிகிச்சை, தடுப்பூசிகள், மகப்பேறு பராமரிப்பு போன்றவை கிடைக்காததால், கோடிக் கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர்.ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. நிலைமை மோசமாவதை தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறினார்.