மெக்சிகோவை புரட்டி போட்ட கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 28 பேர் பலி
மெக்சிகோவை புரட்டி போட்ட கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 28 பேர் பலி
ADDED : அக் 11, 2025 07:05 PM

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழந்து உள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவில் ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன. 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
மீட்புப் பணிக்கான 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளன. அதில், வீதிகள் ஆறுகளாக மாறி, வாகனங்கள் மற்றும் வீடுகளை கிட்டத்தட்ட முழுமையாக நீரில் மூழ்கடித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மெக்சிகோவின் வெராக்ரூஸில் உள்ள டக்ஸ்பானில் ஒரு உணவகம் வெள்ளத்தில் அடித்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.