வியட்நாமில் புரட்டி போட்ட கனமழை; வெள்ளத்தில் சிக்கி 41 பேர் பரிதாப பலி
வியட்நாமில் புரட்டி போட்ட கனமழை; வெள்ளத்தில் சிக்கி 41 பேர் பரிதாப பலி
UPDATED : நவ 21, 2025 09:33 AM
ADDED : நவ 21, 2025 09:30 AM

ஹானோய்: மத்திய வியட்நாமில் மழை வெள்ளத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 52 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின், மத்திய நகரமான ஹியூவில் அதிக மழை கொட்டி தீர்த்தது. இது வியட்நாமில் இதுவரை பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விடாமல் பெய்து வரும் கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். வியட்நாமின் ஆறு மாகாணங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.
மேலும் காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பல பகுதிகளில் மழை 150 செ.மீட்டரைத் தாண்டியுள்ளது.
52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 62 ஆயிரம் பேர்வெளியேற்றப்பட்டுள்ளனர். பல சாலைகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

