சீனா: எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து விபத்து: 100 கார்கள் சேதம்
சீனா: எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து விபத்து: 100 கார்கள் சேதம்
UPDATED : பிப் 23, 2024 08:53 PM
ADDED : பிப் 23, 2024 07:43 PM

பீய்ஜிங்: சீனாவில் எக்ஸ்பிரஸ் சாலையில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
சீனாவின் மிகப்பெரிய நகரங்களான பீய்ஜிங் , சுஸ்ஹோவ் ஆகிய நகரங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலைகள் பெருமளவு உள்ளன. சீனாவில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
சம்பவத்தன்று சுஸ்ஹோவ் மாகாணத்தில் எக்ஸ்பிரஸ் சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலை தடம் தெரியாமல் வேகமாக வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் மோதின. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காருக்குள் பலர் சிக்கி வெளிவர முடியாமல் தவித்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து எக்ஸ்பிரஸ் சாலைகள் மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை மீறி வாகனங்கள் சென்றதால் இந்த விபத்து நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.