இது செய்யாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்; ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் கெடு!
இது செய்யாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்; ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் கெடு!
ADDED : டிச 03, 2024 07:41 AM

வாஷிங்டன்: 'காஸா பிணைக்கைதிகளை ஜனவரி 20ம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால், நரக வேதனை அனுபவிக்க வேண்டி இருக்கும்' என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நடக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் வசித்து வந்த, 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளை அழைத்து சென்றனர். காசாவில் இன்னும் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 101 வெளிநாட்டு மற்றும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் பாதி பேர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலில் 44,400க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் பிணைக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் அதிபராக நான் பெருமையுடன் பதவியேற்கும் தேதியான ஜனவரி 20, 2025க்கு முன், காஸா பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால், நரக வேதனை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
மனித குலத்திற்கு எதிரான அட்டூழியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பின்விளைவுகளை, ஹமாஸ் அமைப்பு சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எஞ்சிய பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான எந்தவொரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, போரை நிறுத்தவும், காஸாவிலிருந்து இஸ்ரேல் படையினர் முழுமையாக வெளியேறவும் ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது. ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை போர் தொடரும். இஸ்ரேலுக்கு இனி எந்த அச்சுறுத்தலும் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.